Monday, September 20, 2021
HomeCricketINDvsENG:3 வது டெஸ்ட் போட்டியில் பழி தீர்த்த இங்கிலாந்து அணி....!

INDvsENG:3 வது டெஸ்ட் போட்டியில் பழி தீர்த்த இங்கிலாந்து அணி….!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி,அனைத்து விக்கெட்களையும் இழந்து 78 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 432 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.எனினும்,இங்கிலாந்து அணி 354 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 121 ரன்கள் குவித்தார்..

இதையடுத்து இந்திய அணி தனது 2 வது இன்னிங்ஸை தொடங்கியது. ரோஹித் சர்மாவும்,கே.எல்.ராகுலும் நிதானமாக விளையாடிய நிலையில், கே.எல்.ராகுல் 8 ரன் எடுத்து அவுட் ஆனார்.அவரை தொடர்ந்து,ரோஹித் சர்மா அரைசதம் கடந்து 59 ரன்கள் எடுத்த நிலையில், ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.இதனையடுத்து,களத்தில் இருந்த புஜாராவுடன் கேப்டன் விராட் கோலி இணைந்தார்.

மிகவும் சிறப்பாக விளையாடிய புஜாரா 189 பந்துகளுக்கு 91 ரன்கள் எடுத்து,ராபின்சன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவர் அவுட் ஆனார்.

அதன்பின்னர், விராட் கோலியுடன் ரஹானே இணைய,இருவரும் நிதானமாக ஆடி வந்த நிலையில்,விராட் கோலி 125 பந்துகளுக்கு 55 ரன்கள் எடுத்து ராபின்சன் பந்துவீச்சில் ஜோ ரூட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.பின்னர் இறங்கிய ரஹானே 10 ரன்கள் எடுத்தும்,ரிஷப் பன்ட் 1 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.

அவர்களை தொடர்ந்து,முகமது ஷமி 6 ரன்களுடனும்,இஷாந்த் சர்மா 2 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.இங்கிலாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், தோல்வியின் விளிம் பில் இந்திய அணி தடுமாறியது.அடுத்து களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா 25 பந்துகளுக்கு 30 ரன்களுடனும் , முகமது சிராஜ் ஒரு ரன் கூட எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

இதனால்,இந்திய அணி 278 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக 76 ரன்கள் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றியைக் கைப்பற்றியுள்ளது.

மேலும்,முன்னதாக சீரிஸில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்திய அணியை ,1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்று இங்கிலாந்து அணி பழி தீர்த்துக்கொண்டது.இதில்,7 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக, இங்கிலாந்தின் ஒல்லி ராபின்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments