“அடுத்த சவால்களை எதிர்கொள்ள தயார்”- வெள்ளை ஜெர்சியில் ஜொலிக்கும் நடராஜன்!

இந்திய அணியின் யாக்கர் மன்னன் என அழைக்கப்படும் நடராஜன், வெள்ளை நிற ஜெர்சியில் ஜொலிக்கும் புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது.

இந்த தொடரில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது. அதில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ்க்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் தொடரில் இருந்து வெளியேறினார். இதனால் அவருக்கு பதில் யாக்கர் மன்னன் நடராஜன் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்தநிலையில், இந்திய அணியின் வெள்ளை நிற ஜெர்ஸியை அணிந்த நடராஜன், அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், “வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம்; அடுத்த சவால்களை எதிர்கொள்ள தயார்” என தெரிவித்துள்ளார். இதனால் டெஸ்ட் போட்டியில் நடராஜனின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும், இவரின் அதிரடியான பந்துவீச்சு, இந்திய அணிக்கு கூடுதலாக பலம் சேர்க்கவுள்ளது, குறிப்பிடத்தக்கது.